December 29, 2014

என் அழகான சின்ன தேவதை

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சிறப்பாக இருக்கும் என்பது நாம் அறிந்த விசயம்தான். கிட்டத்தட்ட அக்டோபரிலிருந்து ஜனவரி முதல் வாரம் வரை ஹாலோவின் (Halloween), நன்றி தெரிவிக்கும் விழா (Thanks Giving), கருப்பு வெள்ளி (Black Friday), கிறிஸ்துமஸ், புத்தாண்டு என வரிசையாக விழாக்கள் கோலாகலமாய் இருக்கும். இந்த மாதங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களில் இலையுதிர்கால விடுமுறை (Fall Break) என்றும், குளிர்கால விடுமுறை (Winter Break) என்றும் அதிகான நாட்கள் விடுமுறையாக இருப்பதால், எங்கு பார்த்தாலும், போக்குவரத்து நெருக்கடியும், எல்லாக்கடைகளிலும் ஜன நெருக்கம் அதிகமாகவும் இருக்கும். இதனால் எல்லா கடைகளுக்கும், வியாபாரிகளுக்கும் ஏகக் கொண்டாட்டம்தான். நம் ஊர் ஆடித்தள்ளுபடி, அட்சய திரிதியை ஸ்பெஷல் மாதிரி வியாபாரிகள் இங்கும் தள்ளுபடி என்ற பெயரில் கொள்ளை லாபம் ஈட்டுவார்கள். இப்படி தள்ளுபடி காலங்களில்தான் அமெரிக்காவில் வசிப்பவர்கள் அதிகமான பொருட்கள் வாங்குவார்கள். வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களின் குடும்பங்களோடு சேர்ந்து கொண்டாடுவதும் இந்த பண்டிகைகள்தான். மேலும் நம் இந்தியர்கள் போல் பிற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் எல்லா மதத்தினரும் இந்தப் பண்டிகைகளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இப்படி கொண்டாட்டங்கள் நிறைந்த இம்மாதங்களில் அமெரிக்காவில் நான் பல ஆண்டுகள் வசித்திருந்தாலும், கடந்த நான்கு ஆண்டுகளாக எனக்கு இங்கு அமெரிக்காவில் இருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் இந்த ஆண்டு அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் குடும்பத்தில் அனைவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி. இப்படி கொண்டாட்டங்களினூடே பக்கத்து மாநிலமான அலபாமாவுக்கு (Alabama) ஒருவார பயணமாக குடும்பத்துடன் சென்றிருந்தேன். பகல் முழுக்க குதூகலமாய் ஊரெல்லாம் சுற்றிவிட்டு இரவு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் நீச்சல் குளத்தில் குளிப்பது வழக்கமாக இருந்தது. இப்படியொரு நாள் நான் குடும்பத்தோடு நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தேன். வழக்கத்திற்கு மாறாக அன்று அதிக நபர்கள் இல்லை. நீச்சல் குளத்தில் மொத்தமே சுமார் 6-7 பேர்தான் இருக்கும். அப்போது ஒர் அமெரிக்க தம்பதியினர் சுமார் மூன்று வயதிருக்கும், ஒரு பெண் குழந்தையோடு உள்ளே வந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்ததும் நானும் என் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். காரணத்தை பிறகு சொல்கிறேன். அந்தப் பெண் குழந்தை என் குழந்தைகளோடு மிக நெருங்கி, குதூகலமாய் நீந்தியும், விளையாடியும், சிரித்தும் மகிழ்ந்தது எங்களுக்கும், அந்த தம்பதியினருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், நானும் என் மனைவியும் அடிக்கடி பார்த்துக்கொள்வதை தவிர்க்க இயலவில்லை. காரணம், அந்தப் பெண் குழந்தைக்கு அப்படியே தமிழ் முகம். அந்த தம்பதியினர் இருவருமே அமெரிக்கர்கள். கட்டாயம் அவர்கள் அந்தப் பெண் குழந்தையை தத்து எடுத்திருக்க வேண்டும் என எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. கிட்டத்தட்ட எங்களை தவிர யாருமே நீச்சல் குளத்தில் இப்பொழுது இல்லை. குழந்தையோடு வந்த அந்தப் பெண்மணியும், என் மனைவியும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். நானும், அந்த அமெரிக்கரும் நீச்சல் குளத்தில் குழந்தைகளோடு விளையாடுவதில் மிக மும்முரமாய் இருந்தோம். ஆனால், இரண்டு மேற்பற்கள் விழுந்திருந்த அந்த அழகான குழந்தை மட்டும் என்னிடமும், என் குழந்தைகளிடமும் படுபயங்கர மகிழ்ச்சியாய் விளையாடிக் கொண்டிருந்தது. ஒரு வழியாய் நாங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு நீச்சல் குளத்திலிருந்து விடை பெற்றோம். அப்போது இரவு மணி சுமார் 10 இருக்கும். என் மனைவியின் முகத்தில் ஏதோ ஒரு சோகம் பற்றிக் கொண்டிருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. என் கண்களால் "என்ன?" என கேட்கையில், "பிறகு சொல்கிறேன்" என அவள் கண்களால் கூறியதைப் புரிந்துகொண்டு, குழந்தைகள் உறங்கும்வரை காத்திருந்தேன். பிறகு, என்

மனைவி கூறியவை....

"அவர்கள் இருவரும் நாம் நினைத்ததுபோல், கணவன் மனைவி இல்லை. அம்மாவும், மகனும். (முதற்கண் அவர்களை தம்பதியர் என நினைத்ததற்கு மன்னிக்கவும். காரணம், பொதுவாக, அமெரிக்கர்களின் தலைமுடியின் நிறம் மற்றும் உடல் அமைப்பை வைத்து வயதை கணிக்க இயலாத ஒரு குழப்பம் ஏற்படும். சரி, அது போகட்டும்). அந்த அம்மாவுக்கு மூன்று ஆண் குழந்தைகள். கணவர் பிரிந்து சென்று விட்டார். மூன்று மகன்களும் அம்மாவோடு வசிக்கின்றனர். பெண் குழந்தைமேல் அம்மாவுக்கு மட்டுமின்றி, மகன்களுக்கும் அளவற்ற ஆசை. கண்டிப்பாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க விருப்பப் படுகின்றனர். ஆனால், மூன்று பேருக்குமே இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் ஆனபின் தம் மனைவியர் தன் அம்மாவுடன் வசிப்பார்களா ? கேள்விக்குறி ? எனவே, திருமணம் ஆவதற்கு முன்னரே ஒரு பெண் குழந்தையை நாம் தத்தெடுப்போம் என முடிவு செய்கின்றனர். இப்படியாக, இணையத்தில் தேடும்பொழுது கிடைத்த தகவல்களின் பேரில் அவர்கள் தத்தெடுத்தது நம் மண்ணில் பிறந்த பெண் குழந்தை. சிறு வயதில் பலாத்காரம், விபச்சாரம், பாலியல் கொடூரங்களால் கற்பிணியாக்கப்பட்டு, பிறந்த குழந்தைகளை பேணி பாதுகாக்க வழியில்லாமல் குப்பைத்தொட்டியிலும், ரயில்வே தண்டவாளங்களிலும் தூக்கி வீசியெறியப்பட்ட குழந்தைகளை தேடி அடைக்கலம் தந்து வளர்க்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுக்கின்றனர். அப்படி தத்தெடுக்கப்பட்ட அழகான பெண் குழந்தைதான் எங்களோடு நீச்சல் குளத்தில் கொஞ்சி விளையாடிய அந்த அழகான தேவதை. அவள் பிறந்த மண் ஆந்திர மாநிலம், ஐதராபாத். அங்கிருந்து தத்தெடுக்கப்பட்டு, இன்று அமெரிக்க மண்ணில் அனைத்து சுக சௌகரியங்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அழகு தேவதையின் முகம் என் கண்ணைவிட்டு இன்றளவும் நீங்கவில்லை. அந்தக் குழந்தையை அவர்கள் காப்பகத்திலிருந்து ஏற்றுக்கொண்டபொழுது, கிட்டத்தட்ட ஊட்டச்சத்து பற்றாக்குறையால் (Mal-Nutrition) மூன்று கிலோ குறைவாக இருந்ததாகவும், தற்போது கடந்த மூன்று மாதங்களில் இரண்டு கிலோ எடை அதிகரித்திருப்பதாகவும் அந்த தாய் கூறி ஆறுதலடைந்ததை என் மனைவி என்னிடம் கூறியதை நினைக்கையில் என் கண்கள் என் கட்டுப்பாட்டை மீறி கலங்குவதை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை.

மேலும், அந்த அமெரிக்க தாய் கூறியவை : பல நாடுகளில் இதுபோல் இருந்தாலும், நாங்கள் இந்தியாவை மிகவும் நேசிக்கிறோம். குறிப்பாக எங்களுக்கு தென்னிந்தியாவை அதிகம் பிடிக்கும், அங்குள்ள கலாச்சாரம், கூட்டுக்குடும்ப முறை, உணவு பழக்க வழக்கங்கள் இப்படி பிடித்தவை ஏராளம். அதனால்தான் இந்தக் குழந்தையை நாங்கள் தத்தெடுத்தோம்" என்று அந்த தாய் கூறியதை நான் பெருமையாக நினைக்க இயலவில்லை. மனமெங்கும் மரணவலி. பாரம்பரியமிக்க நம் மண்ணில் இன்னும் இப்படிப்பட்ட கொடுமைகளும், அதனால் ஏற்படும் வரலாற்று இழுக்குகளும் என்னை தீராத வேதனைகளுக்குள்ளாக்கியதை நான் எப்படி இங்கே விளக்க முடியும். எப்படியாயினும், அந்த மாபெரும் மகத்தான உள்ளங்களுக்கு நான் தலை வணங்குகிறேன். பாரம்பரியமும், கலாச்சாரமும், தேசப்பற்றுமாய் இன்னும் ஆயிரம்....ஆயிரம் நாம் எழுதலாம். ஆனால் எங்கோ, யாரோ, எப்படியோ வந்த அந்த குழந்தையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம்மில் எத்தனை பேருக்கும் வரும்?

வருத்தத்தோடும், வலியோடும், ஆயிரமாயிரம் கேள்விகளோடும், நிற்கதியாய் நான்........

என் அன்பான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.

September 20, 2014

"கன்னியும் காளையும் செம காதல்" முன்னோட்டம்

வணக்கம் உறவுகளே ! "கன்னியும் காளையும் செம காதல்" முன்னோட்டம். நான் இதில் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். தயவு செய்து இந்த முன்னோட்டத்தினை பார்த்து, தங்களின் முக நூல் பக்கத்திலும் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் நண்பர்களுடன் பகிர்ந்து, தங்களின் மேலான ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்குமாறு வேண்டுகிறேன். நன்றி :)



Vanakkam Friends,

I did a Comedy Role in this Movie. Please watch and share "Kanniyum Kaalaiyum Sema Kadhal" Trailer in your FB Timeline, Social websites/Forums and with your friends. Thanks in Advance for your continuous Support and Encourage' :)

July 09, 2014

"தொட்டால் தொடரும்" முன்னோட்டம்

வணக்கம் உறவுகளே! "தொட்டால் தொடரும்" இந்த படத்தில் நான் ஒரு வில்லனாக நடித்திருக்கிறேன். படத்தின் "முன்னோட்டம்" அதாவது 'ட்ரெய்லரை' பார்த்துவிட்டு நண்பர்களிடம் பகிருமாறும், விரைவில் வெளிவர இருக்கும் இப்படத்திற்கு வழக்கம்போல் தங்களின் மேலான ஒத்துழைப்பினையும், வாழ்த்துகளையும் வழங்கவேண்டும் என்றும் வேண்டி நிற்கிறேன். நன்றி, வணக்கம்.