June 19, 2008

இலங்கை தமிழர்களுக்கு தமிழகத்தில் சட்ட விரோதச் சொத்து : கலைஞர்

அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களில் சிலர், பல்வேறு ஆவணங்களைச் சட்டத்திற்கெதிரான வழிகள் மூலம் பெற்று தமிழகத்தில் சொத்து வாங்குவதில் ஈடுபடுவதாகத் தகவல்கள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. இவைகளைப் பரிசீலித்து, இந்தியக் குடிமகனாக அல்லாதவர் இவ்வுரிமைகளைத் துய்க்க வழி இல்லை என்பதை காவல் துறையும், மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்திட வேண்டும் என கலைஞர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கோட்டையில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் 2 நாள் மாநாடு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. மாநாட்டுக்கு முதல் அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கினார். தலைமை செயலாளர் திரிபாதி வரவேற்றார்.

அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், மற்றும் அமைச்சர்கள், டி.ஜி.பி. ஜெயின், சென்னை போலீஸ் கமிஷனர் சேகர், அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள். ஐ.ஜி., டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டுகள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் சட்டம்-ஒழுங்கை சீராக அமல்படுத்துவது அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

முன்னதாக மாநாட்டை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது :- ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தை ஆந்திர மாநில அரசு தொடங்கியிருக்கிறது. இப்படி நம்மை, பிற மாநிலங்கள் பின்பற்றுவதற்குக் காரணம், அதனை முறையாக, சரியாக, செம்மையாக நிறைவேற்றி வரும் அரசு அதிகாரிகளான நீங்களும்தான்.

பெரும் திட்டங்களில் ஒவ்வொரு துறையும் தனித்தனியாகச் செயல்படாமல், அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இத்திட்டங்கள் தாமதப்படாமல், விரைந்து நிறைவேறி மக்களுக்கு நன்மைபயக்கும். இந்த ஒருங்கிணைக்கும் பொறுப்பை நிறைவேற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்களது மாவட்டங்களில் நடைபெறும் பெரும் திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி, தேவைப்பட்டால் அரசுடன் தொடர்பு கொண்டு தடைகளை விரைவில் தீர்த்து வைத்து முன்னேற்றம் காண வேண்டும். தீர்க்க முடியாத சிக்கல்கள் என நீங்கள் கருதும் பட்சத்தில், எந்த நேரத்திலும் என்னையே நேரடியாகத் தொடர்பு கொண்டு தகுந்த அறிவுரைகளைப் பெறுவதற்கும் தயங்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு செம்மையாகப் பேணப்பட்டு தமிழகம் அமைதியின் தொட்டிலாகத் திகழ்கிறது என அனைவரும் பாராட்டுகின்றனர்.

இப்பாராட்டு மேலும் பொலிவுபெற வேண்டுமெனில், கடுங்குற்றம் புரிவோர், கூலிப்படையாகிக் கொடுங்குற்றங்களில் ஈடுபடுவோர், பொதுமக்களை அச்சுறுத்தும் சமூக விரோதிகள் ஆகியோரின் போக்கிற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திட காவல் துறையினர் காலதாமதமின்றி சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டு, பொது மக்களிடையே நம்பிக்கையை வளர்க்க வேண்டும். சில சமூக விரோதிகள், நாடு போற்றும் தலைவர்களின் சிலைகளை அவ்வப்போது சேதப்படுத்தியும் சிதைத்தும் தேவையற்ற சட்டம் ஒழுங்குப்பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர். பொதுமக்களின் அமைதியான வாழ்விற்கு எதிராக, இவ்வாறு செயல்படுபவர்களை இனங்கண்டு, விரைவாகவும் உடனடியாகவும் செயல்பட்டு, அவர்கள் மீது குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ், சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களைத் தயாரிப்பவர்கள், விற்பவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றிக் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், சாலை விபத்துகளைக் குறைக்கவும், விபத்துகள் நேராவண்ணம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வதைத் தடுத்திடச் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

காவல் நிலையங்களுக்குப் புகார் அளிக்க வரும் பொது மக்களைக் கண்ணியமாகவும், மரியாதையுடனும் நடத்திட வேண்டும். மேலும், முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதில் காலதாமதமோ அலைக்கழித்தலோகூடாது. இந்த அறிவுரைகளின்படி, காவல்துறை பொதுமக்களின் உண்மையான நண்பனாகத் திகழ வேண்டும். சொத்துத் தகராறு, விலை மதிப்பு உயர்ந்துவரும் நில பேரங்கள், நிலமாற்றம் போன்ற உரிமையியல் வழக்குகளிலும், கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களிலும் காவல்துறையினர் எக்காரணம் கொண்டும் ஈடுபடவே கூடாது.

மனித உரிமைகள் எவ்வகையிலும் மீறப்படாமல் காவல் துறையினர் தம்முடைய பணிகளைச் செம்மையாகச் செய்திட வேண்டும். ஒவ்வொருவரும் கடமை உணர்வுடனும், மனித நேய உணர்வுடனும் செயல்பட வேண்டும்.

வகுப்பு வாதமும் சாதிய உணர்வும் தமிழ் மண்ணிலிருந்து வேரோடு ஒழிக்கப்படவேண்டும். பிரச்சினை ஏற்படும் போது தொடர்புடைய அனைவரையும் அழைத்துப் பேசி தீர்வு காண்பது, நல்லிணக்கத்தை நிரந்தரமாக உருவாக்கும். வேலையில்லாத் திண்டாட்டம், போதிய கல்வித் தகுதியின்மை ஆகிய காரணங்களால், தடுமாறும் குணம் உடைய, எளிதில் வயப்படத்தக்க இளைஞர்களையும், பழங்குடி மக்களையும் குறி வைத்து மக்களாட்சியில் நம்பிக்கையில்லாத சில தீவிரவாத அமைப்புகள் தீவிரவாதத்தைத் தமிழ் நாட்டில் வேரூன்ற வைத்து அமைதியைக் குலைக்க முயல்வதாகத் தெரிகிறது. இத்தகைய தீவிரவாத அமைப்புகள் தமிழகத்தில் காலூன்ற எவ்வகையிலும் இடம் கொடுத்திடாமல், காவல்துறை இதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிட வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் நிலவிவரும் இனக்கலவரம் காரணமாக தமிழ்நாட்டிற்கு இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வரும் நிலை தொடர்கிறது. 31.5.2008 அன்றைய நிலவரப்படி தமிழ் நாட்டிலுள்ள 117 இலங்கை அகதிகள் முகாம்களில் 73 ஆயிரத்து 433 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தங்கியுள்ளனர்.
.
இலங்கைத் தமிழர்களிடம் நாம் பரிவு காட்டும் அதே வேளையில், அகதிகள் என்ற போர்வையில் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்போரை தமிழகத்தில் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது என்பதில் காவல் துறை மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும். இலங்கைக் கடற்பகுதியை ஒட்டிய வடக்குக் கடல் எல்லையான மன்னார் வளைகுடா, பாக் நீரிணையிலிருந்து திரிகோணமலை வரை உள்ள பகுதி ராணுவம் சார்ந்த பிரச்சினைக்குரிய மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறோம். சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மீனவர்களிடையே அடிக்கடி மேற்கொள்ள வேண்டும். படகுகளில் செல்லும் மீனவர்கள் அனைவரும் அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கனிமொழிக்கு, பைபிள், குரான் பற்றி பேசும் துணிச்சல் உள்ளதா?" - இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன்

பகவத் கீதையை மேற்கோள் காட்டும் கனிமொழிக்கு, பைபிள், குரான் பற்றி பேசும் துணிச்சல் உள்ளதா என இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : பெண்கள் சீரழிந்து கெட்டுப் போவதால்தான் வர்ண ஆசிரம தர்மம் அழிந்து தேவையற்ற சந்ததிகள் பிறக்கின்றனர் என்று பகவத் கீதையில் உள்ளதாக பொருள் சொல்லி இருக்கிறார் கனிமொழி. தந்தையைப் போலவே மகளும் தெரியாத விஷயத்தை பற்றி ஆவேச விளக்கம் சொல்லியிருக்கிறார். கீதையை மேற்கோள் காட்டுவதோ, உபநிஷத்தை, மகாபாரதத்தை, ராமாயணத்தை, பைபிளை, குரானை மேற்கோள் காட்டுவது என்பதோ தடை செய்யப்பட்ட ஒன்றல்ல. உலகத்தின் அத்தனை மரபுகளும், மதங்களும், கோட்பாடுகளும், கொள்கைகளும், இலக்கியங்களும், படைப்புகளும், ஒரு மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று அறிக்கையில் கனிமொழி குறிப்பிட்டிருக்கிறார். கீதையைக் கூறிய கனிமொழி, பைபிள், குரான் போன்ற நூல்களில் மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டி ருக்கும் உதாரணங்களைக் கூறத் தயாரா? அப்படி மேற்கோள் காட்டினால் அவரை துரத்தி, துரத்தி, துரத்தி விரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பார்கள். அல்லது வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் போல நாடு கடத்தி இருப்பார்கள். முதலமைச்சரின் மகள் என்ற திமிரோடு பேசுவதை கனிமொழி நிறுத்திக் கொள்ளவேண்டும். கனிமொழிக்கு தைரியம் இருக்குமேயானால் பகவத் கீதை பற்றி விஷயம் தெரிந்தவர்களோடு விவாதிக்க தயாரா? அப்படியானால் அவருக்கு வசதியான தேதி, பொது இடம் குறிப்பிடட்டும்.